மதுரை:தீ விபத்து உள்ளிட்ட விபத்துக்களை தவிர்க்கும் வகையில், எளிதில் தீப்பற்றக்கூடிய எரிவாயு சிலிண்டர், ஸ்டவ், மண்ணெண்ணெய், பெட்ரோல், அமிலங்கள் மற்றும் வெடிக்கக்கூடிய பொருட்களை ரயிலில் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி கொண்டு செல்பவர்கள், 1989 ரயில்வே சட்டப் பிரிவுகள் 67, 164 மற்றும் 165ன் படி தண்டிக்கப்படுவார்கள்.
மதுரையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி அதிகாலை, சுற்றுலா ரயில் பெட்டியில் சமையலின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 9 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு, சுற்றுலா ரயில் பெட்டிகளில் தொடர்ந்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில், திருநெல்வேலி ரயில் நிலையத்தில் நேற்று நள்ளிரவில் திருநெல்வேலி வர்த்தக பிரிவு ஆய்வாளர் எம்.அரவிந்த் திடீர் சோதனை மேற்கொண்டார். இந்தச் சோதனையின்போது, 59 பயணிகள் பயணித்த மதுரை - புனலூர் ரயிலில் இணைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் சமையலுக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த அடுப்புக்கரி கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அவற்றை ரயிலில் கொண்டு வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த தனியார் சுற்றுலா மேலாளர் சதீஷ் சந்த்தும் (64) கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, மேல் நடவடிக்கைக்காக அவர் திருநெல்வேலி ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும், கண்டுபிடிக்கப்பட்ட அடுப்புக்கரி, அடுப்பு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.