திண்டுக்கல்: சீலப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில், தமிழ்நாடு பிரைமரி, நர்சரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலைப் பள்ளி மற்றும் சிபிஎஸ்இ சங்க ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. பள்ளி குழுமத் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சங்கத்தின் செயலாலர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில், மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, “தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது. திண்டுக்கல் அருகே கணவாய் பட்டியில் இரண்டு ஆண்டுகளாக கட்டணம் கட்டாமல், பள்ளி நிர்வாகியை மாணவரின் பெற்றோர் தாக்கியுள்ளனர். சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்ற அறிவிப்பையடுத்து, நாங்கள் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பள்ளி நிர்வாகிகளை தாக்கி, பள்ளி சொத்துகளை சேதப்படுத்துபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். எனவே, மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் அரசு பாதுகாப்புச் சட்டம் இயற்றியது போல, தனியார் பள்ளிகள் அனைத்துக்கும் பாதுகாப்புச் சட்டத்தை அரசு இயற்ற வேண்டும். மேலும், அங்கீகாரத்துக்காக காத்திருக்கும் பள்ளிகளுக்கு உடனடியாக அங்கீகாரம் வழங்க வேண்டும்.
பத்து ஆண்டுகள் கடந்த பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரத்தை பழைய அரசாணை உத்தரவுப்படி வழங்க வேண்டும். அரசு போக்குவரத்து துறை மாணவர்களின் நலன் கருதி தனியார் பள்ளிகள் வாகனங்களை மாவட்ட எல்லைக்கும், மாநில எல்லைக்கும் சென்று வரும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும். ஆர்டிஇ (RTE - Right to education) சட்டத்தின்படி மத்திய அரசு தந்த ரூ.500 கோடியை மாநில அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.