சென்னை: தனியார்ப் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு வழங்குவதாகத் தனியார்ப் பள்ளிகள் சங்க மாநிலச் செயலாளர் நந்தகுமார் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், வரும் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு முழுமைக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் முழு மனதோடு ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் செய்வோம்.
பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் முன்னாள் மாணவர்கள் அனைவரையும் அனைத்து பள்ளி நிர்வாகிகளும் தனித்தனியாகவோ வாட்ஸப் குழுக்கள் மூலமாகவோ நேரடியாகவோ சந்தித்துப் பேசி ஒரு கோடி ஓட்டுக்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு அனைத்து வாக்குகளையும் பெற்றுத் தருவோம்.
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக 400க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று பாரத தேசத்தை மீண்டும் ஆள வேண்டும். அப்பொழுதுதான் பாரத தேசம் பாதுகாப்பாக இருக்கும். போரில்லா பாரதமாகவும் தெய்வ பக்தியும் தேச பக்தியும் மிக்கவர்களாக நம்நாட்டை உயர்த்த முடியும்.
நம் மக்கள் அனைவரும் அச்சமின்றி நிம்மதியாக நோய் நொடி இன்றி வாழ முடியும். நம் நாட்டு மக்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்ய முடியும். சுயச் சார்புடன் நமது தொழில்களை நாம் செய்து நம் சந்ததியைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
நாம் அனைவரும் சாதி, மத, இன, மொழி பேதங்களுக்கு அப்பாற்பட்டுப் பாதுகாப்போடு வாழ வேண்டும் என்றால் கடந்த 10 ஆண்டுகளில் எப்படி லஞ்ச லாவண்யம் இல்லாமல் பாரத தேசமே ஒரே குடும்பம் என கொடிய கரோனா தொற்று நோய் காலத்தில் 147 கோடி இந்திய மக்களைப் பாதுகாத்து நோய்க்கான மருந்து கண்டுபிடித்து மக்களுக்கு இலவசமாக வழங்கி மதவாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து உலக அளவில் இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்திட பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக மீண்டும் நல்லதொரு ஆட்சி அமைந்து உலகத்தின் விஷ்வகுருவாய் நாம் அனைவரும் உயர்ந்து ஒளி வீசிட முடியும்.