தமிழ்நாடு

tamil nadu

காஞ்சிபுரத்தில் பிரபல தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டு 2வது நாளாக போராட்டம்! - workers are protest for salary hike

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2024, 10:58 PM IST

காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

ஊழியர்கள் போராட்டம்
ஊழியர்கள் போராட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)

காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் பிரபல தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஏசி, வாஷிங் மெஷின், டி.வி உள்ளிட்ட வீட்டு உபயோக எலக்ட்ரானிக் சாதனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இதில் 5000க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். அதில், 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிரந்தர பணியாளர்களாகவும் பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தனியார் தொழிற்சாலையில் கடந்த ஜூன் மாதம் சிஐடியு சங்கம் துவக்கப்பட்டது. சங்கம் அமைத்தற்கான அறிமுக கடிதம் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால், இதனை நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கைகளையும் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் நேற்று (செப் 9) முதல் தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்கள், தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு மற்றும் 8 மணி நேர வேலை உள்ளிட்ட பொது கோரிக்கைகளின் மீது பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்ள வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பலியான 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு - TN CM MK STALIN

இந்நிலையில் இன்று மதியம் 2 மணி அளவில் இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தொழிலாளர் துறை துணை ஆணையர் கமலக்கண்ணன் தலைமையில் போராட்டக் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தின் மனிதவள மேம்பாட்டு பிரிவு மேலாளர், CITU தொழிற்சங்க மாநில தலைவர் சௌந்தர்ராஜன், மாநில செயலாளர் முத்துக்குமார் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தனியார் தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் போராட்டம் குறித்து தொழிலாளர் துறை துணை ஆணையர் கமலக்கண்ணனிடம் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கடைசி வரை தொழிற்சங்கத்திற்கு தனியார் தொழிற்சாலை நிர்வாகம் அனுமதி மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

மேலும், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை 13ம் தேதி நடைபெறும் என தொழிலாளர் துறை ஆணையர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் வரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details