கன்னியாகுமரி: நாடாளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 7ம் கட்டத்தேர்தல் ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் 3 நாட்களுக்கு கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்ள உள்ளார்.
மோடி பயணம்:இன்று மாலை 4 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக வான்வழி பயணம் மேற்கொள்ளும் பிரதமர், கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் வந்து இறங்குகிறார்.
அங்கிருந்து கார் மூலம் அருகில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, பின்னர் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்குத் தனி படகு மூலம் செல்கிறார். மேலும், இரவில் அங்கு தங்கும் பிரதமர், நாளை அதிகாலையில் இருந்து தியானம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீவிர பாதுகாப்பு: பிரதமரின் வருகை முன்னிட்டு, வான்வழி பயணமான ஹெலிகாப்டர் பாதுகாப்பு ஒத்திகை மற்றும் தரை வழியாக அவர் செல்லும் பகுதிகளில் தீவிர சோதனைகளும் நடைபெற்றது. அதேபோன்று, கடல் வழியில் அவர் பயணிக்கவிருக்கும் படகு மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தைச் சுற்றிலும் உள்ள கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், கடற்படை போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு: கன்னியாகுமரி வரும் சுற்றுலாப் பயணிகளின் ஆதார் அட்டை சரிபார்ப்பு மற்றும் விலாசம் பெறப்பட்டு அவர்கள் முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே சுற்றுலா பகுதிகளுக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோன்று கன்னியாகுமரியில் இயங்கி வரும் அனைத்து தனியார் தங்கும் விடுதிகளிலும் தங்கி இருப்பவர்களின் விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு, தனியார் தங்கும் விடுதிகளில் சோதனையும் போலீசாரால் நடத்தப்பட்டு வருகிறது.
பிரதமரின் பயணத் திட்டத்தில், அவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்குச் செல்ல உள்ளதாகவும். ஜூன் 1ஆம் தேதி தியானத்தை முடித்து கொண்டு, திருவள்ளுவர் சிலை அமைந்து உள்ள பகுதிக்கு சென்று பார்வையிட உள்ளதாகவும், அதிகாரப்பூர்வமற்ற தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 1ஆம் தேதி மாலை கரை திரும்பும் பிரதமர், ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லி கிளம்புகிறார்.
இதேபோல, கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரம் முடிந்த பின்பு பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள குகையில் 17 மணி நேரம் தியானம் செய்தார். அதேபோல், தற்போது இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒடிசா மாநில மக்களின் மத்தியில் தமிழர்களை திருடர்கள் என பேசிய கருத்து தற்போது, தமிழ்நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால், பிரதமரின் கன்னியாகுமரி வருகைக்கு தமிழ்நாட்டில் உள்ள திமுக, காங்கிரஸ் மற்றும் சிபிஐ(எம்) உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேர்தல் 2024: விருதுநகரில் மும்முனை போட்டி காணும் நட்சத்திர வேட்பாளர்கள்! - ஜொலிக்கப் போவது யார்?