தூத்துக்குடி: நாடாளுமன்றத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகளுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் துவக்கி உள்ளனர்.
இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் 27ஆம் தேதி கோவை மாவட்டம், பல்லடத்தில் நடைபெறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' நடைபயன நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். தமிழகத்தில் பாஜக செல்வாக்கு பெற்ற மாவட்டம் என பெயர் பெற்ற கோவை மாவட்டத்தில் பிரதமரின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமாக இது அமையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து 28ஆம் தேதி பிரதமர் மோடி கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி துறைமுக பள்ளி வளாகத்தில் காலை 11 மணியளவில் பிரதமர் வந்து இறங்குகிறார். பின், அங்கிருந்து கார் மூலம் விழா நடக்கும் இடத்திற்கு செல்கிறார்.