சென்னை:இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குனர், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய முயற்சியால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் உயரும் பொருட்டு, பல்வேறு முன்னோடித் திட்டங்கள் பள்ளிக்கல்வித் துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வரும் கல்வி ஆண்டில், அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் திறன் வகுப்பறைகள் (Smart Class Rooms), அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் (HI-Tech Labs), அதற்குத் தேவையான இணையதள (Broadband Connectivity) வசதியுடன் அமைக்கப்பட உள்ளன.
மேலும், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினியும் (TAB) வழங்கப்பட உள்ளது. அரசுப் பள்ளிகளில் 2024-2025ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை சென்னை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை நடுநிலைப் பள்ளியில் நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் பெரும்பான்மையான அரசுப் பள்ளிகள், ஊரகப் பகுதிகளில்தான் அமைந்து உள்ளது. ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் 3 முதல் 5 வயதுடைய குழந்தைகள் பள்ளி முன்பருவக் கல்வியை கற்று வருகின்றனர்.
மேற்படி, அங்கன்வாடி மையங்களில் கல்வி பயிலும் 5 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குழந்தைகளையும் முழுமையாக அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கை செய்வதற்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், 'இல்லம் தேடிக் கல்வி' தன்னார்வலர்கள் மற்றும் சுய ஆர்வலர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்கி, மாணவர் சேர்க்கைப் பணிகளை சிறந்த முறையில் நடத்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், அங்கன்வாடி மையங்கள் அல்லது வேறு பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு சேர்க்கையாக விரும்பும் குழந்தைகள் மற்றும் ஒன்றாம் வகுப்பு அல்லாத பிற வகுப்புகளுக்கு சேர்க்கை ஆக விரும்பும் மாணவர்களுக்கு, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்கைக்கான இடங்களை பள்ளிகள் வழங்க உரிய அறிவுரைகளை, வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அல்லது ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு, அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையின் படியும், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி), வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் மாவட்டத் திட்ட அலுவலருடன் ஒன்றிணைந்து செயல்பட்டு, அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளில் ஒருவர் கூட விடுபடாமல் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை செய்திடவும், வரும் ஆண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தினை கணிசமான அளவில் உயர்த்திடவும் சார்நிலை அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், அரசுப் பள்ளிகளில் சேர்க்கையாகும் மாணவர் விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை D (EMIS) இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க:சர்ச்சையில் சிக்கிய வி3 யூடியூப் சேனல் உரிமையாளர்.. நெல்லையைச் சேர்ந்த விஜயராகவனின் பின்னணி என்ன?