தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 3, 2024, 3:39 PM IST

ETV Bharat / state

அய்யா வைகுண்டர்; ஆளுநர், அண்ணாமலைக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் கண்டனம்!

Governor RN Ravi: ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அண்ணாமலையின் ஸ்டிக்கர் ஓட்டும் அரசியலை அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Governor RN Ravi
Governor RN Ravi

சென்னை:தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஸ்டிக்கர் ஓட்டும் அரசியலை, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சமத்துவ மண்ணான தமிழ்நாட்டின் சமத்துவ சமயக் கோட்பாடுகளைத் தொடர்ந்து திருடி ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது பார்ப்பனியம். திருவள்ளுவர், வள்ளலார் தொடங்கி இன்று அய்யா வைகுண்டர் வரையில் திருட்டு தொடர்கிறது.

ஆர்.எஸ்.எஸ் ஆளுநர் ரவி, அண்ணாமலை இணைந்து நடத்தும் இக்கூத்தினை அறிவார்ந்த சமத்துவ நெறி கொண்ட தமிழகத்தின் ஆன்மிக மரபு நிராகரிக்கிறது. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாட்டின் கோயில்களை பார்ப்பனியப் பிடியிலிருந்து மீட்க போராடிவரும் மாபெரும் திராவிட இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் ஆர்எஸ்எஸ் கூட்டம்.

அதன் ஒரு பகுதியாக, சமத்துவ தமிழ் மரபுகளைக் கையகப்படுத்தும் வேலையைச் செய்து வருகிறது. சிதம்பரத்தில் பட்டியல் சமூகத்தினருக்கு பூணூல் போடுவது, வள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது, வள்ளலாரை சனாதன சிமிழுக்குள் அடைப்பது வைகுண்டரை பார்ப்பனிய மயமாக்குவது என்ற ஆன்மீக சித்து வேலைகளை தமிழ்நாட்டின் சமத்துவ ஆன்மீகம் உறுதியாக நிராகரிக்கிறது.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' - 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற மாபெரும் சமத்துவ மரபு கொண்ட தமிழ் ஆன்மீக சமூகம் ஆர்எஸ்எஸ், பாஜக, ஆளுநர் ரவி, அண்ணாமலையின் ஸ்டிக்கர் ஒட்டும் அரசியலை மோசடியான ஆன்மிகத்தைக் கடுமையாக எதிர்க்கிறது, வன்மையாகக் கண்டிக்கிறது.

பட்டியல் சமூகத்தினருக்கு பூணூல் போட்டு பார்ப்பனிய சிமிலுக்குள் அடைக்கும் ஆர்.என்.ரவி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாட பட்டியல் சமூகத்தை அனுமதிப்பாரா? தீட்சதர்களிடம் பேசுவாரா? தமிழகம் முழுக்க உள்ள சைவ வைணவக் கோயில்களில், பிறப்பால் பார்ப்பனர் தவிர மற்ற கவுண்டர், தேவர், நாடார், வன்னியர், ஆதிதிராவிடர் உள்ளிட்ட இந்து தமிழ் சாதியினரை அர்ச்சகராக்க கோரிக்கை வைப்பாரா?

உண்மையில் இந்துக்களுக்கான கட்சி பாஜக எனில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக பாஜக குரல் கொடுக்காதது ஏன்? தனது பார்ப்பனிய, சனாதன, வைதீக ஆன்மீகத்தில் நம்பிக்கை அற்று, மாபெரும் தமிழ் சமய மரபைக் களவாடும் இக்கூட்டத்தை 2024 தேர்தலில் மொத்தமாக முறியடிப்போம்.

2024 தேர்தலில் பாஜகவை மட்டுமல்ல, ஆர்எஸ்எஸ் ஆளுநர் ஆர்.என்.ரவியையும் வீட்டுக்கு அனுப்ப தமிழ் ஆன்மீக உலகம் கோயில் கோயிலாகச் சென்று தனது பணியைச் செய்யும். தனது மரபை, ஆன்மீகத்தை பேணிப் பாதுகாக்கத் தவறிய எந்த ஒரு இனமும் வரலாற்றில் நீடிக்காது. நமது தனித்த சமத்துவ ஆன்மீக மரபை பாதுகாப்போம். ஆர்எஸ்எஸ் ஆளுநர் ரவி கூட்டத்தை நிராகரிப்போம்" எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:38 திமுக எம்பிக்களும் வேஸ்ட் லக்கேஜ்? - எஸ்.பி. வேலுமணி சாடல்

ABOUT THE AUTHOR

...view details