திருநெல்வேலி: நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது நாளை (ஜூன் 4) நடைபெற இருக்கிறது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை ஆலங்குளம், பாளையங்கோட்டை, ராதாபுரம், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, நாங்குநேரி என மொத்தம் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளடக்கிய தொகுதியாக இருக்கிறது.
இங்கு மொத்தம் 16 லட்சத்து 50 ஆயிரத்து 532 வாக்காளர்கள் உள்ள நிலையில், கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது 64.10 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையமான திருநெல்வேலி அரசு பொறியல் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து அங்கு 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் அறையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு, அந்த அறை முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக ராணுவ வீரர்கள், துணை ராணுவ வீரர்கள், தமிழ்நாடு காவல்துறையினர் உட்பட மொத்தம் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி போடப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி நாளை காலை சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கி இருக்கிறது. முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது. தொடர்ந்து, 8:30 மணியிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
வாக்கு என்னும் பணிக்காக 14 மேதைகள் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும். மேலும், சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக மொத்தம் 306 பணியாளர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர்.