தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“கடவுள் கொடுக்கும் மழை வளத்தை நிர்வகிக்கும் திறன் ஆட்சியாளர்களிடம் இல்லை” - பிரேமலதா விஜயகாந்த் தாக்கு! - PREMALATHA VIJAYAKANTH

Premalatha Vijayakanth: “கடல் தண்ணீரை நன்னீராக மாற்றித் தருவதாக பல லட்சம் கோடி ரூபாய்க்கு திட்டம் அறிவிக்கிறார்கள். நாம் பாலைவனத்தில் வாழவில்லை, கடவுள் நமக்கு மழை வளத்தைக் கொடுக்கிறார். ஆனால், அதனை நிர்வகிக்கும் திறன் தற்போது உள்ள ஆட்சியாளர்களிடம் இல்லை” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுக அரசை விமர்சித்துள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2024, 5:50 PM IST

பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி வைத்து, தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு, உதவித்தொகை மற்றும் சீருடைகள் வழங்கினார். தொடந்து, தொழிற்சங்க நிர்வாகிகளுக்கான தேமுதிக தொழிற்சங்கத்திற்கான அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “இதுவரை எத்தனையோ தேர்தலைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்த முறை வாக்கு சதவீதம் அறிவிப்பதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. கடைசியில் 69 சதவீதம் வரை வாக்குப்பதிவு என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஏன் இவ்வளவு குளறுபடி என்பது கேள்விக்குறியாக உள்ளது. தேர்தல் ஆணையம் ஸ்ட்ராங் ரூம் வைத்திருக்கிறார்கள்.

உண்மையில் அது ஸ்ட்ராங் ரூமா என்று தேர்தல் ஆணையம் தான் கூற வேண்டும். ஸ்ட்ராங் ரூம் பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு 20 நிமிடத்திற்கான சிசிடிவி காட்சிகள் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இது கண்டனத்துக்குரியது. முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் முடிந்து 45 நாட்கள் வரை தேர்தல் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.

எனவே, தேர்தல் ஆணையம் ஸ்ட்ராங் ரூம்களில் பாதுகாப்புகளை வலுப்படுத்தி, வாக்கு எண்ணும் நாளில் எந்தவித குளறுபடியும் இல்லாத வகையில் முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். ஜூன், ஜூலை மாதங்களில் விஜயகாந்திற்கு நினைவிடம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

காவிரியில் கோடை காலம் வந்ததும் தண்ணீர் இல்லை என்பதும், தமிழ்நாட்டுப் பெண்கள் தண்ணீர் இல்லை என குடங்களை கொண்டு வந்து சாலையில் அமர்ந்து போராடுவதும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. ஒரு பக்கம் மழைநீரை கடவுள் தருகிறார். ஆனால், அவற்றை முறையாக சேமிக்கும் திறனற்ற அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. காவிரியில் நீர் கொடுக்க வேண்டியது அவர்கள் கடமை.

கேட்க வேண்டியது நம் உரிமை என்ற போதிலும், கர்நாடகாவிடம் கெஞ்சாமல் மழைநீரை நாம் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளில் கழிவு நீர் கலப்பதை தடுத்து, நீர்நிலைகளை தூர்வாரி மழைநீர் கடலில் சென்று கலப்பதை தடுக்க வேண்டும். ஆனால், நல்ல தண்ணீரை கடலில் கலக்க விட்டு பின்னர் கடல் தண்ணீரை நன்னீராக மாற்றி தருவதாக பல லட்சம் கோடி ரூபாய்க்கு திட்டம் அறிவிக்கிறார்கள்.

எதற்காக இந்த பணிகள்..? நாம் பாலைவனத்தில் வாழவில்லை. கடவுள் நமக்கு மழை வளத்தை கொடுக்கிறார். ஆனால் அதனை நிர்வகிக்கும் திறன் தற்போது உள்ள ஆட்சியாளர்களிடம் இல்லை. இந்தக் கோடை காலத்தில் அனைத்து நீர் நிலையங்களையும் தூர்வாரி ஜூன், ஜூலைகளில் பெய்யும் மழை நீரை சேகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது. நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்நாடகாவில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி பொறுப்பில் உள்ளது. முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் எப்படி காவிரியில் இருந்து தண்ணீர் பெற்று கொடுத்தாரோ அதே போல் திமுக அரசும் கூட்டணி கட்சியிடம் பேசி தண்ணீரை பெற்று தரலாமே? ஏன் முடியவில்லை. திமுக அரசு தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள். கோடை காலத்திற்கு திமுக அரசு எவ்வாறு தயாராக உள்ளது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பதில் கூற வேண்டும்.

பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். ஏற்காட்டில் நேற்று வாகன விபத்து ஏற்பட்டு ஏழு நபர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். கோடை காலங்களில் சுற்றுலாத்தலங்களுக்கு பொதுமக்கள் அதிகம் செல்வது வழக்கம். ஆகவே அங்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அரசின் கடமை. எனவே பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

மதுரையில் கல்குவாரியில் வெடி விபத்து, தேர்த் திருவிழா என்றால் தேர் சக்கரங்கள் விபத்துக்குள்ளாவது, சுற்றுலாத்தலங்களுக்குச் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவது, தேர்தல் வாக்கு சதவீதம் குளறுபடி உள்ளிட்ட அவலங்களை தொடர்ந்து தமிழகத்தில் நிலவி வருகிறது. ஆனால் இவற்றை சரி செய்ய வேண்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானலில் விளையாடிக் கொண்டிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:“கர்நாடகா எப்போ தரேன்னு சொல்லிருக்காங்க?” - அமைச்சர் துரைமுருகன் விளாசல்! - Duraimurugan About Karnataka

ABOUT THE AUTHOR

...view details