சென்னை: பிரேம் வத்சாவை நிறுவனராகக் கொண்ட பேர்பேக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் என்ற கனடா நாட்டு நிதி நிறுவனம், சென்னை ஐஐடி மூளை மையத்தின் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஆராய்ச்சி மானியமாக இந்திய ரூபாயில் 41 கோடி வழங்க உள்ளது.
சென்னை ஐஐடியில் 1971-ல் ரசாயனப் பொறியியல் பாடத்தில் முதல் வகுப்பில் பட்டம் பெற்ற பிரேம் வத்சாவுக்கு 1999-ஆம் ஆண்டு சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருது வழங்கப்பட்டது.
சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம் 2022 மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. மனித மூளை தரவு, அறிவியல் வெளிப்பாடு, தொழில்நுட்பக் கருவிகள் ஆகியவற்றைக் கொண்டு மனித மூளையை செல்லுலார் மட்டங்களில் படம்பிடிக்க ஒரு உலகளாவிய லட்சியத் திட்டத்தை இந்த மையம் செயல்படுத்தி வருகிறது.
இது குறித்து பேர்பேக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனரும், தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பிரேம் வத்சா கூறும்போது, "சென்னை ஐஐடியின் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தில் பணியின் தரமும், குழுவினரின் அர்ப்பணிப்பும் உண்மையிலேயே மிகச் சிறப்பானதாகும். மனித மூளையின் உயர் தெளிவுத்திறன் படத் தொகுதிகளை உருவாக்கும் தொழில்நுட்பத் தளம் மிகவும் தனித்துவமான ஒன்றாகும். மனித மூளை பற்றிய நமது அறிவாற்றலை மேம்படுத்துவதிலும் மிகச் சவாலான மூளை நோய்களுக்கான தீர்வுகளுக்கு வழிவகுக்கும் நுண்ணறிவை மேம்படுத்துவதிலும் இந்த மையம் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தும், இந்த மிகப்பெரிய சிக்கலைக் கையாள, உலகெங்கும் உள்ள பல்வேறு துறைகளின் மூளை ஆராய்ச்சியாளர்களுடன் இவர்கள் நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்தி பணியாற்றி வருகின்றனர்" என தெரிவித்தார்.
மேலும், "சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம் உலகத்தரம் வாய்ந்த உயர்செயல்திறன்கொண்ட ஹிஸ்டாலஜி பைப்லைனை உருவாக்கியுள்ளது. இது மனித மூளையை பெடாபைட் (petabyte) அளவில் உயர் தெளிவுத்திறன் கொண்ட டிஜிட்டல் படங்களாக மாற்றுவதுடன் பல்வேறு வகையான மற்றும் வயதுடைய மனித மூளையின் பிரத்யேகமான உயர்தரப் பார்வையை அளிக்கிறது.
மூளை முழுவதும் உள்ள செல்லுலார் நிலை விவரங்களை இவை வெளிப்படுத்துகின்றன. இந்தத் தரவுகளைக் கொண்டு உலகளவில் உள்ள முன்னணி நரம்பியல் நிபுணர்கள் புதிய கண்டுபிடிப்புகளுக்காகவும், தகவல்களை பெறுவதற்காகவும் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: பெரியார் பல்கலை கூடுதல் பொறுப்பிற்கு செலவழித்த ரூ.50 லட்சத்தை பல்கலை நிதியில் சேர்க்க கோரிக்கை! -ஆசிரியர்கள் சங்கம்