தேனி:ஆண்டிபட்டி அருகே உள்ள நெசவு மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் சம்பள உயர்வு, அடிப்படை வசதி உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும், அதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் உடன்படாத நிலையில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தினசரி ரூ.30 லட்சம் மதிப்பிலான சேலை உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் அரசு தலையிட வேண்டும் என விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் ஆகிய கிராமங்களில் நெசவுத் தொழில் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. அங்கு 100க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில், சுமார் ஐந்தாயிரம் நெசவாளர்கள், நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இங்குள்ள விசைத்தறி கூடங்கள் மூலம் பல்வேறு உயர் ரக காட்டன் சேலைகள் மற்றும் பேன்சி ரக சேலைகள் போன்றவை உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை:
மேலும், சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதிகளில் வசிக்கும் நெசவாளர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு, பேச்சுவார்த்தை அடிப்படையில் வழங்கப்படும். அந்த வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை விசைத்தறி தொழிலாளர்களுக்கு போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தம், டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது விட்டதாகக் கூறுகின்றனர்.
இந்த நிலையில், டி.சுப்புலாபுரம் பகுதி நெசவாளர்கள் 50 சதவீத ஊதிய உயர்வு, 20 சதவீதம் போனஸ், விசைத்தறி கூடங்களில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர்.