தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளி நாளில் அதிகரித்த காற்று மாசு.. பட்டாசு வெடிக்கும் நேரத்தை மாற்ற வேண்டுமா? பூவுலகின் நண்பர்கள் கூறுவது என்ன? - DIWALI CRACKERS BURST TIMINGS

பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறியவில் பூர்வமாக சிந்தித்து நேரங்களை ஒதுக்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ஈடிவி பாரத் வாயிலாகத் தெரிவித்துள்ளது.

தீபாவளி கொண்டாட்டம்
தீபாவளி கொண்டாட்டம் (Credits - ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2024, 10:03 PM IST

Updated : Oct 31, 2024, 10:33 PM IST

சென்னை: இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் தீபாவளி பண்டிகைக்காக, நாடு முழுவதும் நேற்று முதலே பட்டாசு வெடிக்கத் தொடங்கினர். இவ்வாறு பட்டாசு வெடிப்பதனால் தலைநகரான சென்னையில் மட்டும் ஆலந்தூர், பெருங்குடி, அரும்பாக்கம், வேளச்சேரி ஆகிய 4 இடங்களில் காற்றின் தரக் குறியீடு 200ஐ தாண்டி உள்ளது.

சாதாரணமாக காற்றின் தரக் குறியீடு 50-க்கு கீழ் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பான்மையான இடங்களில் AQI 150க்கும் அதிகமாக உள்ளது. இவ்வாறு பட்டாசு வெடிப்பதால் மோசமடைந்த காற்றின் தரம் குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் செயற்பாட்டாளர் பிரபாகரன் ஈடிவி பாரத் தளத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

அதில் பேசிய அவர், “பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு மட்டும் இல்லாமல், அத்துடன் நிலம் மற்றும் நீர் மாசு சேர்ந்து ஏற்படுகிறது. இதில் காற்று மாசு மக்களை நேரடியாக அதிகளவில் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. தீபாவளி பண்டிகை நாளில் நேற்று மாலை முதல் தொடர்ச்சியாக பட்டாசு வெடிப்பதால், காற்றின் மாசு என்பது காற்றின் தர குறியீடு (AQI) 200-லிருந்து 250ஆக இருக்கிறது. இது பாதுகாப்பாக நாம் சுவாசிக்கக்கூடிய காற்றை விட, பல மடங்கு அதிகமாக இருக்கிறது.

குறிப்பாக, காற்றின் தரக் குறியீடு 50 என்பது நாம் பாதுகாப்பாக சுவாசிக்கக்கூடிய காற்றாகும். இது 4 மடங்கு அதிகரித்து, 250ஆக தற்போது காற்றின் மாசு உள்ளது. காற்று மாசு, மக்கள் பட்டாசு வெடிப்பதால் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. பட்டாசு வெடிப்பதற்காக அரசு ஒதுக்கி இருக்கும் நேரம் என்பதே பெரிய பிரச்னைக்குரிய நேரமாக இருக்கிறது.

பூவுலகின் நண்பர்கள் பிரபாகரன் (Credits - ETV Bharat Tamil Nadu)

காலை மற்றும் இரவில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாதிரி நேரங்களில் வெப்ப அலை குறைந்து பனிமூட்டம் அதிகரித்து காணப்படும். இந்த மாதிரி நேரத்தில் பட்டாசு வெடிக்கும் பொழுது, காற்று பனியுடனும் மாசு கலந்து காணப்படுகிறது. இதைத் தடுக்கும் விதமாக, அரசு பட்டாசு வெடிக்கும் நேரத்தை பகலில் ஒதுக்க வேண்டும்.

ஏனென்றால், வெயில் ஏற்படக்கூடிய நேரங்களில் பட்டாசு வெடித்தோம் என்றால், காற்று எளிதில் மேலே சென்று விடும். மாசு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கிறது. அதேபோல், இரவு நேரத்தில் வெடிக்கக்கூடிய வெடிகளை இரவு நேரங்களில் வெடித்துக் கொள்ளலாம். நேர மாற்றம் குறித்தும், காற்றின் மாசு குறித்தும் அரசிடம் தெரிவிக்க ஆலோசித்து வருகிறோம்.

தீபாவளி நாளில் சென்னை சாலை (Credits - ETV Bharat Tamil Nadu)

குறிப்பாக, அரசு பட்டாசு வெடிக்க ஒதுக்கி இருக்கும் நேரமான காலை மற்றும் மாலை நேரத்தில் ஏன் பட்டாசு வெடிக்கக்கூடாது என கூறுகிறோம் என்றால், அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் பனிமுட்டம் அதிகளவு இருப்பதால், புகை வெளியேற வழி இல்லாமல் தேங்கி இருக்கும். அத்துடன் வெப்பநிலையும் குறைந்திருப்பதால், புகை மேலே எழுவதற்கான வாய்ப்பு இல்லாமல் ஒரே இடத்தில் இருப்பதால் நாம் சுவாசிக்கக்கூடிய நிலை உள்ளது.

அதேபோல், காற்றின் வேகமும் 4 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கும் என்பதாலும், மழை வரக்கூடிய சூழல் இருப்பதாலும், காற்று மாசு அடைந்து சிக்கல் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. காற்றில் மாசு ஏற்படுவதற்கான எல்லா சூழ்நிலைகளும் அமைந்திருப்பதால், காற்று தரக் குறியீடு 300க்கு மேல் செல்லும்.

இதையும் படிங்க:சென்னையில் தரமான காற்று இல்லை.. தீபாவளி நாளில் வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

அதேபோல், சிலர் கூறுவது போல், வாகனத்தில் ஏற்படும் மாசும் பட்டாசு வெடிப்பதில் ஏற்படும் மாசும் வேறு வேறு என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பட்டாசு புகையை ஒரு மணி நேரம் சுவாசிப்பதால் உள்ளுறுப்புகளில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, அதிக சத்தம் வரக்கூடிய பட்டாசுகளில் பொட்டாசியம் நைட்ரேட் பயன்படுத்துகிறார்கள். இவை தோலில் அலர்ஜியை ஏற்படுத்துகிறது. புற்றுநோய் ஏற்படவும் காரணமாக அமைகிறது.

பேரியம் நைட்ரேட் இருப்பதால் மூச்சுக்குழாயில் இரிட்டேஷன் ஏற்படுத்தும். ஆண்டிமோனி சல்பைட் அதிகளவு சுவாசித்தால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும், குறைந்த அளவு சுவாசித்தால் வயிற்று உபாதைகளும் ஏற்படும். அம்மோனியம் பொட்டாசியம் சேர்ந்த பெர்கோரைட், தைராய்டு ஏற்பட காரணமாக உள்ளது.

சல்பர் டையாக்ஸைடு தான் காற்று மாசிற்கு முக்கிய காரணம். அவற்றை எரிக்கும் போது ஏற்படும் நுண்துகள் தான் பனியுடன் கலந்து ஸ்மோக்காக மாறுகிறது. இதனால் ஆஸ்துமா நோயாளிகள், வயதானவர்களை அதிகமாக பாதிப்பு ஏற்படுகிறது. பட்டாசு வெடிப்பு நேரத்தை ஒதுக்குவது சரி தான். ஆனால். அந்த நேரத்தை அறிவியல் பூர்வமாக சிந்தித்து ஒதுக்க வேண்டும்.

பகல் நேரங்களில் பட்டாசுகளை அதிகமாக வெடிப்பதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும். இரவு நேரத்தில் வெடிக்கக்கூடிய பட்டாசுகள், உயரே சென்று வெடிக்கக்கூடிய பட்டாசுகளை மட்டுமே இரவு நேரங்களில் வெடித்தும், பிற பட்டாசுகளை பகல் நேரத்தில் வெடிக்கலாம்.

மேலும், அதிக புகை ஏற்படுத்தும் பட்டாசுகளான புஸ்வானம், சங்கு சக்கரம் பட்டாசுகளை தடை செய்ய வேண்டும் என நாங்களும் கோரிக்கை வைத்து இருக்கிறோம். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, பட்டாசுகள் வெடிப்பதை நிறுத்த நீண்ட நாட்களுக்கான நடவடிக்கையாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Last Updated : Oct 31, 2024, 10:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details