சென்னை:கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பூந்தமல்லி போலீசார், மாணவனின் உடலை மீட்டு, உடற்கூராய்விற்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
உடற்கூராய்வு பரிசோதனையின் போது, மாணவனின் உடலில் அதிக அளவில் காயங்கள் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதனையடுத்து, மாணவனின் வீட்டில் போலீசார் சோதனை செய்து பார்த்தபோது, அவர் பயன்படுத்திய டைரி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் சூர்யா என்ற நபரின் பெயர் எழுதி வைத்திருந்தது. இது குறித்து போலீசார் விசாரித்தபோது, சூர்யா தலைமறைவாகவுள்ளார் என தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து தலைமறைவாக இருந்த சூர்யாவை கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட மாணவன் சூர்யா மற்றும் 17 வயது சிறுவன் என மூன்று பேர் இடையே ஓரினச்சேர்க்கையில் இருந்து வந்ததாகவும், ஒரு கட்டத்தில் சூர்யாவுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதை அந்த மாணவன் தவிர்த்து வந்துள்ளார்.
இதன் பின்னர், சூர்யா அந்த மாணவரிடம் சென்று, தன்னுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வேண்டும், இல்லை என்றால் அவரது குடும்பத்தில் உள்ள பெண்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மாணவன் தற்கொலைக்கு காரணமான சூர்யா மற்றும் 17 வயது சிறுவன் உட்பட இரண்டு பேரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பொதிகை ரயிலில் 30 கிலோ போதைப்பொருள் கடத்தல்.. கைதானவரின் சென்னை வீட்டில் சோதனை!