விழுப்புரம்:விழுப்புரம் வெள்ள பாதிப்புகள் குறித்து வனத்துறை அமைச்சர் பொன்முடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இருவேல்பட்டு கிராமத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வில் இருந்தபோது நான் உள்பட அலுவலர்கள் மீது சேறு அடிக்கப்பட்டது, சாலை மறியல் போராட்டம் நடந்தது. இது எல்லாம் அரசியலுக்காக; அதை நான் அரசியலாக்க விரும்பவில்லை,” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “விழுப்புரத்தில் வரலாறு காணாத மழை பதிவாகியுள்ளது. ஆனால் முதலமைச்சரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் ஓரளவு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் விழுப்புரம் மாவட்டத்தில் பாதித்த பகுதிகளை உடனடியாக ஆய்வு செய்தனர். மாவட்டத்தில் மொத்தமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர். விக்கிரவாண்டியில் 6 பேர், திருவெண்ணெய்நல்லூரில் 2 பேர், விழுப்புரத்தில் 5 பேர், வானூரில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மழையினால் நெடுஞ்சாலை துறை கட்டுபாட்டில் உள்ள 26 சாலைகள் சேதமடைந்துள்ளன. அதில் 17 சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. விளைநிலங்கள் 80 ஆயிரத்து 520 ஹெக்டர் பாதிக்கப்பட்டுள்ளன. ஹெக்டேருக்கு 22,500 ரூபாய் மானவாரி பயிருக்கு 8500 ரூபாய் வழங்கப்படும்.
கன மழையால் 94 பசுமாடுகள் மற்றும் கன்றுகள், 352 ஆடுகள் உயிரிழந்துள்ளன. 67 நிவாரண முகாம்கள் அமைத்து 4906 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கபட்டவர்களுக்கு 69,000 உணவு பொட்டலங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. கூரை வீடுகள் சேதமடைந்ததற்கு 10 ஆயிரமும், முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு கலைஞர் கனவு இல்லத்தில் வீடுகட்டி தரப்படும்.