விழுப்புரம்: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டணிக் கட்சிகளுடன் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு என்பதால், மாநிலம் முழுவதும் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.
அந்த வகையில், விழுப்புரம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் துரை.ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் ஆகியோரை ஆதரித்து, ஏப்ரல் 5ஆம் தேதி, விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
அதில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளார். இதற்காக பிரமாண்ட மேடை அமைக்க விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை அமைச்சர் பொன்முடி, எம்.எல்.ஏ.க்கள் நா.புகழேந்தி, இரா.லட்சுமணன் ஆகியோர் திங்கள்கிழமை அன்று பார்வையிட்டனர்.
இதையும் படிங்க:தஞ்சையில் அதிக ஓட்டு வாங்கினால் 6 பவுன் தங்கம்.. மா.செக்களுக்கு அமைச்சர் அறிவித்த பம்பர் ஆஃபர்!
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பொன்முடி, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், அடுத்த மாதம் 5ஆம் தேதி விழுப்புரத்தில், விழுப்புரம் மற்றும் கடலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக உள்ள 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி (INDIA alliance) வேட்பாளர்கள் அமோக வெற்றியைப் பெறுவார்கள். மேலும், இந்தியா கூட்டணி நாடு முழுவதும் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றும்.
இந்தியா கூட்டணி உருவாக காரணமாக இருந்ததே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். அதனால், மக்கள் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றனர். திமுக, விசிக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தேர்தல் பணிகளில் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, திமுகவை எதிர்த்து போட்டியிடுபவர்களால் வெற்றி பெறவே முடியாது " என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து, அதிமுகவிற்கு திமுகவிற்கும் தான் போட்டி என்கிற கருத்து குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "அதிமுக என்கிற ஒரு கட்சி தற்போது இருக்கிறதா? ஓபிஎஸ், இபிஎஸ், தினகரன் உள்பட 5, 6 அணிகளாக அதிமுக உடைந்துள்ளது. திமுக தனி பலமிக்க கட்சியாக தற்போது உருவெடுத்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கிறது" எனக் கூறினார்.
இதையும் படிங்க:தூத்துக்குடி மார்க்கெட்டில் கண்ணீருடன் வந்த மூதாட்டிக்கு ரூ.1,500 கொடுத்த முதல்வர் ஸ்டாலின்.. நடந்தது என்ன?