கோயம்புத்தூர்:பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதி தம்மம்பதி. சமீபத்தில் தம்மம்பதி பகுதியில் உள்ள 120 ஹெக்டேரையும், அதேபோல் சர்க்கார்பதி என்னும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கும் 30 ஹெக்டேர் பரப்பில் இருந்த கருவேலமரம் மற்றும் உன்னிச் செடிகள் வனத்துறையினரால் அகற்றப்பட்டது. வனப்பகுதிகளில் கருவேலமரம் மற்றும் களைச் செடிகளை அகற்றி நல்ல மரங்களை நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், அங்கு புதிதாக மரங்களை வளர்க்க விதைப்பந்துகள் தூவும் பணியில் வனத்துறையினர் இறங்கினர்.
விதைப்பந்துகளை நட்ட மாணவர்கள்:இதனால் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட 150 ஹெக்டேர் பரப்பளவில் கல்லூரி மாணவர்களைக் கொண்டு 13 லட்சம் விதைப்பந்துகள் தூவப்பட்டது. இதற்காக நேற்று பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இருக்கும் என்.சி.சி மாணவர்கள் சுமார் 300 பேர் விதைப்பந்துகளைத் தூவினர். இதனையடுத்து, இன்று ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், விமானப்படை மற்றும் தேசிய மாணவர் படையின் அதிகாரிகள் தலைமையில் இந்தப் பணி தீவிரமாக நடைபெற்றது.