சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி(47) கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அண்மையில் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை 5.20 மணிக்கு பவதாரிணி சிகிச்சை பலனின்றி காலமானதாக தகவல் வெளியானது. இந்த செய்தி, பவதாரிணியின் ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்து, சோகத்தில் மூழ்கடித்தது.
பவதாரிணி முதன்முதலில் ராசய்யா படத்தில், மஸ்தானா.. மஸ்தானா... என்ற பாடல் மூலம் அறிமுகமானவர். இவரது குடும்பமே இசைக்குடும்பம் என்பதால், தந்தை இளையராஜா மற்றும் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா இசையில் அதிக அளவிலான பாடல்களைப் பாடியுள்ளார். பாரதி படத்தில் பாடிய 'மயில்போல பொண்ணு ஒன்னு' பாடலுக்காக சிறந்த பெண் பின்னணி பாடகி என்ற தேசிய விருதைப் பெற்றவர்.
அதனைத் தொடர்ந்து, நடிகை ரேவதி இயக்கத்தில் வெளியான 'மித்ர் மை பிரண்ட்' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அவதாரமெடுத்தார். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார். தனக்கென தனித்தன்மையுடனான குரலில், மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தவர் பவதாரிணி.
தற்போது பவதாரிணியின் மறைவும் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் உள்ள பவதாரிணியின் உடல் இன்று மாலை சென்னை கொண்டு வரப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:பிரபல பின்னணி பாடகியும், இசைஞானியின் அன்பு மகளுமான பவதாரிணியின் அகால மரணத்தால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்: தனது இனிமையான குரல் வளத்தால் பல இசை ரசிகர்களை கவர்ந்து, தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்று, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவரின் இழப்பு இசைத்துறைக்கு பேரிழப்பாகும்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: தனித்தன்மையுடன் கூடிய குரலால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த பவதாரிணியின் மரணம், தமிழ் இசை உலகிற்கு பேரிழப்பு
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: இசைஞானி இளையராஜா மகளும், திரைப்பட பின்னணி பாடகியுமான பவதாரிணி மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
திமுக எம்.பி கனிமொழி: இசைக் கலைஞர் பவதாரிணி மறைவு செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பின்னணி பாடகராக தனித்துவமிக்க பாடல்களைத் தந்த அவரது மறைவு தமிழ் திரைத்துறைக்குப் பேரிழப்பாகும்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை இளம் வயதிலேயே பெற்ற சிறப்புக்குரியவர் பவதாரிணி. வித்தியாசமான குரல் வளத்தைக் கொண்டுள்ள அவர், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல பாடல்களை பாடி ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட பெருமைக்குரியவர். இவரது இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.