தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயில் ஒன்று நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) காலை சைதாப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, ரயிலில் பயணித்த பச்சையப்பன் மற்றும் நந்தனம் கல்லூரி மாணவர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சனையில் ஒருவருக்கு ஒருவர் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில் மின்சார ரயிலின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது மட்டுமின்றி, ரயிலில் பயணித்த இரு பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், கைகளில் கத்தியுடன், தகாத வார்த்தைகளால் பேசி, கற்களை வீசி மாணவர்கள் மோதலில் ஈடுபடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
ஏற்கனவே, ரூட்டு தல விவகாரத்தில் மாணவர்கள் பேருந்து மீது ஏறி அராஜகத்தில் ஈடுபட்டதும், ரயிலில் கத்தி போன்ற ஆயுதங்களைக் கொண்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதனை அடுத்து சென்னை காவல்துறை இதனை தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு கல்லூரியிலும் அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய துணை ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, மாணவர்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.