சென்னை:கடந்த ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 16 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளும் விசாரணையில், அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும், வெவ்வேறு ரவுடிகளும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது அம்பலமாகி வருகிறது.
இந்த நிலையில், இவ்வழக்கில் சமீபத்தில் கைதான ஹரிகரன், அருள், பொன்னை பாலு, வினோத் ஆகியோரை காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பவ இடத்திலிருந்து 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, அந்த செல்போன்கள் உடைக்கப்பட்டு ஆற்றில் வீசப்பட்டதால் அவற்றை பறிமுதல் செய்து, அதன் பாகங்களை காவல் ஆணையரக சைபர் லேப்பில் கொடுத்துள்ளனர். மேலும், வாக்குமூலத்தை தொழில்நுட்ப ஆதாரத்தோடு ஒப்பிட்டு பார்க்க காவல்துறை தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட நேரத்தில் கொலையில் ஈடுபட்டவர்கள் யாருடன் தொடர்பில் இருந்தார்கள், யாருக்கு லைவ் லோகேஷன் அனுப்பப்பட்டது போன்ற விவரங்களை சேகரிப்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் உள்ள தகவல்கள் கிடைத்த பின்பு கொலையாளிகளுக்கு பொருளுதவி செய்தது யார் என்பது தெரியவரும் எனக் கூறப்படுகிறது.