சென்னை:பெரம்பூர் பகுதியில் கடந்த 5-ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக படுகொலை செய்தனர். இந்த வழக்கில், முதற்கட்டமாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த 11 பேரில் திருவேங்கடம் என்பவர் தான் பதுக்கி வைத்த ஆயுதங்களை எடுப்பதற்காக காவல்துறையினர் அழைத்துச் சென்ற போது, போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படும் நிலையில் தற்காப்புக்காக சுட்டதில் திருவேங்கடம் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், வழக்கறிஞர் மலர்கொடி வங்கி கணக்கில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது தெரியவந்தது. இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் உதவியதாக மலர்கொடி, ஹரிஹரன், சதீஷ் ஆகியோரை காவல்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 14 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடையதாக கூறப்படும் பாஜக மகளிர் அணி நிர்வாகி அஞ்சலை என்பவரை பிடிக்க காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அதோடு, கைது செய்யப்பட்ட ஹரிஹரன் கொடுத்த தகவலின் பேரில் சம்போ செந்திலையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.