விழுப்புரம்:கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் அருந்தி பலியானோரின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 24 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர். கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோட்டைமேடு பகுதியில் உள்ள கோமுகி ஆற்றங்கரை அருகே நந்தவனம் பகுதியில் 18ம்தேதி இரவு சாராயம் வாங்கி குடித்த பலருக்கும் வயிற்று வலி, கண்பார்வை இழப்பு என உடல் உபாதைகள் ஏற்பட்டன.
இதைத்தொடர்ந்து பலரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொடர்ந்து விழுப்புரம், சேலம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலை கவலைக்கிடமாகவும் இருக்கிறது. கள்ளச்சாராயம் குடித்த பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 124 பேரில் பலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
இந்த கள்ளச்சாராய இழப்பிற்கு காரணம்? என்னவென்று அறிய தடய அறிவியல் இயக்குனர் சண்முகத்தை அழைத்து வந்து போலீசார் சோதனை செய்தனர். அவர், சாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பதை உறுதி செய்துள்ளார். இதைத்தொடர்ந்து கள்ளச்சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜை போலீசார் கேள்விகளால் துருவி துருவி விசாரித்துள்ளனர். சாராய சப்ளையர் சின்னதுரையை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதேபோல, ஜோசப் ராஜ் என்பவர் போலீஸிடம் சிக்காமல் தலைமறைவாக இருக்கின்றார். இந்நிலையில், விசாரணையில் காவல்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று கிடைத்துள்ளது.