சென்னை:சென்னையில் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆள் சேர்த்ததாக சென்னை சைபர் கிரைம் போலீசார் 6 பேரை கைது செய்தனர். குறிப்பாக, இவர்கள் பல வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஹிஜிபுதாகிர் அமைப்பின் மூலமாக உலகளாவிய காலிபெட் இஸ்லாமியக் கொள்கை முறையை ஷரியா சட்டத்தின் அடிப்படையில் கொண்டு வர முயற்சித்ததாக சென்னை சைபர் கிரைம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், பொறியாளர் அமீர் உசேன், அவரது தந்தை மன்சூர் மற்றும் சகோதரர் அப்துல் ரகுமான் மற்றும் முகமது மவுரிஸ், காதர் நவாஸ் செரிப், அகமது அலி உமரி ஆகிய 6 பேர் மீது ஊபா (UAPA) சட்டம் பாய்ந்தது. சென்னையில் முதன்முறையாக இது போன்ற சர்வதேச இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் அந்த அமைப்பின் கருத்தியலை பரப்புவதை முக்கியமாக செய்து வருவது தெரிய வந்தது. அமீர் உசேன் யூடியூப்களில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
குறிப்பாக, பொதுத் தேர்தலுக்கு எதிரான கொள்கையைக் கொண்டிருக்கிற காரணத்தினால், அதற்கு ஏற்றார்போல் பல்வேறு கருத்துக்களை மக்களிடம் பரப்பி வருவதாக போலீசார் கண்டுபிடித்தனர். மேலும், இந்த அமைப்பின் கொள்கைப்படி, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் காலிபெட் கொள்கை முறையில் மக்கள் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக, தற்போது நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்லாமியர்கள் வாக்களிக்கக் கூடாது என பரப்புரை மேற்கொண்டு வந்ததாக தகவல் தெரிகிறது. மேலும், வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக கூட்டங்கள் நடத்துவதும், குறிப்பிட்ட நபர்களை மட்டும் அழைத்து பூட்டப்பட்ட அறைக்குள் கூட்டங்களை நடத்தியதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.