சென்னை: தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்கும் முயற்சியில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் நாகல்கேணி மீன் மார்க்கெட் அருகே சங்கர் நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமாக ஆண் மற்றும் ஒரு பெண் வெகுநேரமாக நின்று கொண்டிருந்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. பின்னர், அந்த நபரிடம் போலீசார் நடத்திய சோதனையில், உயர்ரக கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். அதனை பறிமுதல் செய்து அவரிடம் விசாரித்ததில் தன் மனைவியுடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பின்னர், இருவரையும் சங்கர் நகர் காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் நடத்திய விசாரணையில், இவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஷியாம் ஹான்ஸ் (30), பிரதிமா (29) என தெரியவந்துள்ளது. ஒடிசாவில் இருந்து சென்னைக்கு வேலைக்காக வந்ததும், மாதம் ஒருமுறை ஒடிசா மாநிலத்துக்கு சென்று ரயில் மூலம் உயர் ரக கஞ்சாவை எடுத்து வந்து அதிக விலைக்கு விற்று வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், கல்லூரி மாணவர்களை மட்டும் குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.