தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செங்கல்பட்டில் குழந்தைகள் கடத்தல்? போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்! - Chengalpattu children missing issue - CHENGALPATTU CHILDREN MISSING ISSUE

Chengalpattu Children Missing case: செங்கல்பட்டில் நேற்று பிற்பகல் பள்ளிக்கு அருகே வைத்து கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட 2 குழந்தைகளை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட குழந்தைகள் புகைப்படம்
மீட்கப்பட்ட குழந்தைகள் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 9, 2024, 3:39 PM IST

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒழலூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வேலன் (31), இவருக்கு ஆர்த்தி என்ற பெண்ணுடன் திருமணமாகி 11 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், ஒராண்டுக்கு முன்னர் கணவர் - மனைவி இடையே ஏற்பட்ட பிரச்னையில், ஆர்த்தி தாய் வீட்டில் வசித்து வருவதாகத் தெரிகிறது.

மேலும், குழந்தைகள் ஒழலூரில் உள்ள அரசுப் பள்ளியில் 6 மற்றும் 2ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில், குழந்தைகள் இருவரும் நேற்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற நிலையில், மதிய உணவு இடைவேளையில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்பட்டது. பின்னர், இதுகுறித்து செங்கல்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை செய்தனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த போது குழந்தைகள் வலுக்கட்டாயமாக காரில் அழைத்துச் செல்வது தெரிய வந்தது. பின்னர், சிசிடிவியில் பதிவாகியிருந்த காரின் பதிவு எண்ணை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, குழந்தைகளை கடத்திச் சென்ற காரை ராணிப்பேட்டை பகுதியில் வைத்து போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சென்ற செங்கல்பட்டு தாலுகா போலீசார் இரு குழந்தைகளையும் மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குழந்தையின் தாய் அவரது நண்பர்களான கோகுல், சரவணன் ஆகியோரை வைத்து குழந்தைகளை அழைத்துச் சென்றது தெரிய வந்தது.

மேலும், கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்வதால் குழந்தைகளைப் பார்ப்பதற்கு அழைத்துச் சென்றதாக குழந்தைகளின் தாய் தெரிவித்துள்ளார். இருப்பினும், குழந்தைகளை காரில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற குற்றத்திற்காக கோகுல் மற்றும் சரவணன் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: போனில் வந்த மிரட்டல்.. 67 லட்சம் உடனே டிரான்ஸ்பர்.. கோவை தொழிலதிபரை நடுங்க வைத்த ம.பி.கும்பல்!

ABOUT THE AUTHOR

...view details