தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணைக்கு மறுக்கும் ரவுடி நாகேந்திரன்? அடுத்தகட்ட மூவ் என்ன? - Armstrong Murder Case - ARMSTRONG MURDER CASE

Armstrong Murder Case Investigation: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் உள்ள ரவுடி நாகேந்திரன் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

ரவுடி நாகேந்திரன் மற்றும் ஆம்ஸ்ட்ராங் (கோப்புப்படம்)
ரவுடி நாகேந்திரன் மற்றும் ஆம்ஸ்ட்ராங் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 16, 2024, 3:59 PM IST

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 23 நபர்கள் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து மாற்றி மாற்றி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி திருவேங்கடம் தப்பிச் செல்ல முயன்றபோது போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இத்தகைய சூழ்நிலையிலேயே, இந்த கொலை வழக்கில் 24வது நபராக வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ரவுடி நாகேந்திரனை செம்பியம் தனிப்படை போலீசார் சிறையில் வைத்து கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்த செம்பியம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், நாகேந்திரனை கைது செய்ய செம்பியம் தனிப்படை போலீசார் வேலூர் சிறைக்குச் சென்றபோது, கைது வரண்டில் நாகேந்திரன் கையெழுத்திட மறுத்ததாகவும், அதேபோல் எழும்பூர் நீதிமன்றத்தில் நாகேந்திரனை போலீசார் ஆஜர்படுத்தியபோது போலீஸ் காவலிற்கு என்னை அனுப்ப வேண்டாம் என நீதிமன்றத்தில் நாகேந்திரன் முறையிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுமட்டுமல்லாது, நீதிமன்றத்தில் தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும், வாரத்திற்கு இரண்டு முறை டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்றும் நாகேந்திரன் முறையிட்ட நிலையில், அவருக்கு தகுந்த மருத்துவ சிகிச்சைகளுடன் பரிசோதனைகள் செய்ய வேண்டும் எனக் கூறி போலீஸ் காவல் வழங்கி உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரன் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், மூன்று நாட்கள் மட்டுமே காவலில் எடுத்துள்ள நிலையில், இதுவரை அவரிடம் இருந்து எந்த ஒரு தகவலும் பெறப்படவில்லை என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக, ஆம்ஸ்ட்ராங் கொலை செய்ய எப்படி திட்டம் தீட்டப்பட்டது? வேறு யாரெல்லாம் இந்த கொலைக்கான திட்டத்திற்கு அணுகி உள்ளார்கள்? ஆம்ஸ்ட்ராங்கிற்கும் உங்களுக்கும் என்ன மாதிரி தொடர்பு உள்ளது? போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பி போலீசார் நாகேந்திரனிடம் விசாரணை நடத்தியதாகவும், ஆனால், போலீசாரின் எந்த கேள்விக்கும் நாகேந்திரன் பதில் கூறாமல் அமைதியாக இருந்து வருவதாகவும் போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இது மட்டுமல்லாது, தனக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என ஒரே பதிலை திருப்பி திருப்பி நாகேந்திரன் கூறுவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் உள்ள நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமனிடம் விசாரணை செய்து அவரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், நாகேந்திரனிடம் கேள்விகள் முன்வைத்த போதிலும் அவர் பதிலளிக்காமல் தொடர்ந்து போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகையச் சூழலில், தனது உடல்நிலை சரியில்லை எனவும், தற்போது தன்னிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டாம் எனவும் நாகேந்திரன் கூறுவதாக தெரிவிக்கப்படும் நிலையில், நாளையுடன் நாகேந்திரனின் போலீஸ் காவல் முடிவடைய உள்ளது. ஆகையால், மீண்டும் அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:ஆளில்லாத வீடுகள் தான் டார்கெட்.. வீடு புகுந்து கொள்ளையடிக்கும் பெண்கள்.. சத்தியமங்கலம் பகீர் சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details