பெலிக்ஸ் ஜெரால்டின் அலுவலகத்தில் போலீசார் சோதனை (Video credits - ETV Bharat Tamil Nadu) சென்னை: பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், தேனியில் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதுவரை 7 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர், கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் போடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக சவுக்கு சங்கர் வீட்டில் காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, கஞ்சா, பணம், லேப்டாப் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்த நிலையில், அவரது வீடு மற்றும் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சவுக்கு சங்கர் பேசிய நேர்காணலை ஒளிபரப்பிய தனியார் யூடியூப் சேனலின் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டை, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர், டெல்லியில் இருந்த பெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்து திருச்சிக்கு நேற்று அழைத்து வந்தனர்.
திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, பெலிக்ஸ் ஜெரால்டை வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பெலிக்ஸ் ஜெரால்டு திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில், இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெலிக்ஸ் ஜெரால்டின் வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் சோதனைக்குச் சென்ற போது, பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து பெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “எங்களது வீட்டில் நடைபெற்ற சோதனையில் 53 ஆவணங்களை போலீசார் எடுத்துள்ளனர். தன்னுடைய பெயரில் உள்ள அசல் ஆவணங்களைக் கொடுக்கும் படி கேட்டதற்கு, திருச்சி நீதிமன்றத்தில் மனு அளித்து பெற்றுக் கொள்ளும்படி காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து, பெலிக்ஸ் ஜெரால்டின் தனியார் யூடியூப் அலுவலகத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி ஒரே நேரத்தில் வீடு மற்றும் அலுவலகம் என இரண்டு இடங்களில் சோதனை செய்து, தன்னை பதட்டம் அடைய வைக்கக் கூடாது என்றும், யூடியூப் அலுவலகம் தன்னுடைய பெயரில் இருப்பதால் போலீசார் எப்படி சோதனை செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினேன்.
அதற்கு போலீசார், இந்த அலுவலகத்தை பெலிக்ஸ் ஜெரால்டு பயன்படுத்தியதால் நீதிமன்ற உத்தரவின் பெயரில் சோதனை நடைபெறுகிறது. வேண்டுமென்றால் உங்களுடைய ஆட்களை வைத்து சோதனை செய்து கொள்ளலாம். எந்த பொருள்களையும் நாங்கள் எடுத்துக் கொண்டுப் போவதில்லை என காவல்துறையினர் உறுதியளித்தனர். இதனையடுத்து தனியார் யூடியூப் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது.
இதையும் படிங்க:+1 தேர்வு முடிவுகள் வெளியீடு.. 91.17 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி.. - TN 11th Public Exam Result