சென்னை:யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் கோயம்புத்தூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தேனியில் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கும் பதிவு செய்யப்பட்டது. சென்னையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது மூன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுவரை 7 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் போடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகச் சவுக்கு சங்கர் வீட்டில் காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கஞ்சா, பணம், லேப்டாப் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து உள்ளனர்.
இந்த நிலையில் சவுக்கு சங்கர் கைதை தொடர்ந்து, அவரது பேட்டியை ஒளிபரப்பு செய்த தனியார் யூடியூப் சேனலின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்ட் என்பவர் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பெலிக்ஸ் ஜெரால்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்கு முன் ஜாமீன் வழங்க மனு அளித்திருந்தார். ஆனால் மனு மீதான விசாரணையின் போது பெலிக்ஸ் ஜெரால்டுக்கு முன்ஜாமீன் எதுவும் வழங்க முடியாது என நீதிபதி தெரிவித்தனர்.