மயிலாடுதுறை:நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து, கடந்த மாதம் தவெகவின் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார். இதற்கிடையில், இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்தை பதிவு செய்த கட்சியாக அங்கீகரித்தது. அதுமட்டுமின்றி, மாநாடு நடத்துவதற்கு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதியும் அளித்துள்ளது.
அக்கட்சியின் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தவெக மாநாடு பணிகளுக்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மயிலாடுதுறை மாவட்டத்தின் சீர்காழி மற்றும் மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகளில் இன்று பங்கேற்கிறார்.
அதனைத் தொடர்ந்து, கட்சி மாநாடு குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசனையில் ஈடுபட உள்ளார். மயிலாடுதுறையில் இரண்டு இடங்களில் கட்சியின் கொடியை ஏற்றி வைக்க உள்ளார். இதற்காக மாயூரநாதர் கோயில் மேல வீதியில் கட்சிக் கொடி ஏற்றும் விழாவுக்கு போலீசாரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும், வாய்மொழியாக வரவேற்பு ஆர்ச் அமைக்கவும் அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:த.வெ.க. மாநாடு தேதியை இன்று அறிவிக்கிறார் விஜய்?
இதனையடுத்து, மாயூரநாதர் கோயில் மேலவீதியில் பொதுச் செயலாளரை வரவேற்க கட்சியினர் ஆர்ச் அமைத்துள்ளனர். மேலும், மயிலாடுதுறையில் வழிநெடுகிலும் கட்சிக் கொடியினை கட்டியுள்ளனர். இந்நிலையில், இன்று அப்பகுதிக்குச் சென்ற காவல்துறையினர், அனுமதி பெறாமல் போக்குவரத்திற்கு இடையூறு அளிக்கும் வகையில் சாலையை ஆக்கிரமித்து ஆர்ச் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அந்த ஆர்ச்சை அகற்ற தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். போலீசார் உத்தரவின் பேரில், கட்சி நிர்வாகிகள் அந்த ஆர்ச்சை அகற்றியுள்ளனர்.