திருநெல்வேலி:திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே ஜெயக்குமார் காணவில்லை என அவரது குடும்பத்தினர் கடந்த இரண்டாம் தேதி உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், கடந்த 4ம் தேதி ஜெயக்குமார் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று ஜெயக்குமாரின் உடல் அவரது சொந்த ஊரான கரை சுத்துபுதூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த ஜெயக்குமார் ஏற்கனவே, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகச் சிலரது பெயர்களைக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாகப் புலன் விசாரணை மேற்கொள்ள எட்டு தனி படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படைகள் திருநெல்வேலி மாவட்டம் மட்டுமல்லாது சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் இடம் பெற்றுள்ள நபர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, முன்னாள் அரசு ஊழியர் குத்தாலிங்கம், தொழிலதிபர் ஜேசுராஜா ஆகியோரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தனியார் பள்ளியில் கட்டிடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் 30 லட்சம் ரூபாய் பணம் தனக்குத் தர வேண்டும் என ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த நிலையில் அப்பள்ளியின் தாளாளரான ஜெய்கரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும், விசாரணை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனுடைய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தங்கபாலுவிடம் விசாரணை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஐந்து முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த காங்கிரஸ் கட்சியில் திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தனுஷ்கோடி ஆதித்தனிடம் தனிப்படை பிரிவைச் சார்ந்த ஆய்வாளர் அஜிகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.