சென்னை:சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ஆம் தேதி இரவு மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த செம்பியம் காவல் நிலைய போலீசார், 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 11 பேரையும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்களிடம் தற்போது நடத்தப்பட்டு வரும் விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருள், இந்த கொலைச் சம்பவத்திற்கு முழு திட்டம் தீட்டி மூளையாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது. இவரது வீடு திருநின்றவூர் பகுதியில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.
மேலும், இவர் கொடுத்த திட்டத்தின் படிதான் ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்ளிட்டோர் கொலை திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருள், மறைந்த ஆற்காடு சுரேஷ் உடன் 15 ஆண்டுகள் உடனிருந்ததும், அவர் சம்பந்தப்பட்ட வழக்குகளை இவர் கையாண்டதும், இவர் ஆற்காடு சுரேஷின் உறவினர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.