வேலூர்: மூன்று பேரை ஏமாற்றி வாடகை கார் திருடிச் செல்லப்பட்ட சம்பவம் குறித்து வேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலுார் மாவட்டம், திருமலைக்கோடி பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் கார்களை வாடகைக்கு விடும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், இவர் தன்னுடைய இனோவா (Innova) கார் திருடப்பட்டுள்ளதாக வேலுார் தெற்கு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், ஆய்வாளர் காண்டீபன் மற்றும் உதவி ஆய்வாளர் சந்தோஷ் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், "கார் வாடகை விடும் தமிழ்செல்வனுக்கு தெரிந்த நபர் டோல்கேட் பகுதியை சேர்ந்த ஹரிஹரன். இவர் கார் டிரைவராக பணிபுரியும் சலவன்பேட்டையை சேர்ந்த ஹரிஷ்விக்கியை தொடர்பு கொண்டு, ஆக்டிங் டிரைவராக செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு ஹரிஷ்விக்கி ஒப்புக்கொண்டதை அடுத்து, வாடிக்கையாளர் பரமேஸ்வரன் என்பவரை தொடர்பு கொள்ளுமாறு ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, ஹரிஷ்விக்கி வாடிக்கையாளர் பரமேஸ்வரனை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, என்னிடம் கார் இல்லை, காரை வாடகைக்கு எடுத்து வருமாறு பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதனால், இது குறித்த தகவலை ஹரிஷ்விக்கி ஹரிஹரனிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கார் வாடைகைக்கு தமிழ்செல்வனை தொடர்பு கொள்ளுமாறு ஹரிஷ்விக்கியிடம் தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, ஹரிஷ்விக்கி தமிழ்செல்வனை தொடர்பு கொண்டு, இனோவா காரை கடந்த டிசம்பர் 30ஆம் தேதி வாடகைக்கு எடுத்துள்ளார். தொடர்ந்து வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் வாடிக்கையாளர் பரமேஸ்வரனை ஹரிஷ்விக்கி பிக் அப் செய்துள்ளார். அந்த சமயத்தில், வாடிக்கையாளர் பரமேஸ்வரன் தனக்கு மற்றொரு கார் வேண்டும் என்றும் டிரைவர் வேண்டாம், நானே ஓட்டிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனால், ஹரிஷ்விக்கி தமக்கு தெரிந்த நபரிடமிருந்து ஸ்விப்ட் (Swift) காரினை எடுத்து வந்துள்ளார். அதன்படி, ஹரிஷ்விக்கி ஸ்விப்ட் காரிலும், வாடிக்கையாளர் பரமேஸ்வரன் வாடகைக்கு எடுத்த இனோவா காரிலும் சென்றுள்ளனர்.