மதுரை:மதுரை மாவட்டம், கூடல்நகர் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசிக்கும் 5ம் வகுப்பு பயிலும் 11 வயது மாணவி, பள்ளி விடுமுறை காரணமாக வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை சிறுமி, வீட்டின் குளியல் அறையில் மயங்கிய நிலையில் கிடந்ததாகக் கூறி, வீட்டில் உள்ளோர் சிறுமியை வள்ளுவர் காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.
இதையடுத்து அங்கு சிறுமிக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், சிறுமியை அங்கு அனுமதித்துள்ளனர். அப்போது அங்கு சிறுமி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, உயிரிழந்த சிறுமியின் உடல், உடற்கூறு ஆய்விற்காக கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில், மதுரை கூடல்புதூர் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சிறுமி குளிக்க சென்றபோது குளியல் அறையில் மயங்கி விழுந்ததாகவும், மருத்துவமனையில் அனுமதித்து முதற்கட்ட சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்ததாகவும் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.