சென்னை: சென்னை துரைப்பாக்கம், குமரன் குடில் பிரதான சாலையில் கட்டுமானப் பணி ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று காலை அந்த கட்டுமானப் பணிக்கு வந்த மாரி என்பவர் அங்கு சூட்கேஸ் ஒன்று இருப்பதைப் பார்த்துள்ளார். இது பணிக்கு இடையூறாக இருப்பதாக எண்ணிய மாரி, சூட்கேசை தள்ளியுள்ளார். அப்போது, அந்த சூட்கேசில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அவ்வழியாகச் சென்ற துரைப்பாக்கம் காவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சூட்கேசை திறந்து பார்த்த போது, ஒரு பெண்ணை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து சூட்கேஸில் அடைத்து வைத்து அங்கு வீசிச் சென்றது தெரியவந்தது. பின்னர், இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த சென்னை இணை ஆணையர் சி.பி.சக்கரவர்த்தி, அடையாறு துணை கமிஷனர் பொன்கார்த்திக்குமார் உள்ளிட்ட போலீசார் சூட்கேசை திறந்து பார்த்து, கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட உடல் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, சூட்கேசை பறிமுதல் செய்து, உடல் பாகங்களை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் பாலியல் தொழிலில் ஈடுபடும் சென்னை மணலியைச் சேர்ந்த தீபா (32) என்பதும், இவர் திருமணம் ஆகாமல் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததும், இடைத்தரகர் மூலமாக பாலியல் தொழிலில் ஈடுபட இங்கு வந்ததும் தெரியவந்தது.