வேலூர்: குடியாத்தம் அருகே இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பாக, குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறையைச் சேர்ந்தவர் குமார் (24). கட்டிட கூலி வேலை செய்து வரும் இவர், நேற்று முன்தினம் வழக்கம் போல் நண்பர்களுடன் வேலைக்குச் சென்றுள்ளார். ஆனால், அன்றிரவு வீடு திரும்பாத நிலையில், அவரது உறவினர்கள் அவரைத் தேடியுள்ளனர்.
இதனிடையே, தட்டப்பாறை அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள சமையலறை அருகே ரத்தக்கறை பதிந்து இருப்பதாக குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். இதில், காணாமல் போன குமார் அருகில் இருந்த கால்வாயில் சடலமாக கிடந்துள்ளார்.
இதனையடுத்து, அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவரது தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து தட்டப்பாறை பகுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், போலீசாரின் மோப்ப நாய், மனோஜ் என்பவரின் வீட்டின் முன்பாக சென்று நின்றுள்ளது. இதனால், சந்தேகத்தின் பேரில் மனோஜ் உட்பட அவரது நண்பர்கள் மூன்று பேரைப் பிடித்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இறந்த குமார் கஞ்சா விற்று வந்தாரா அல்லது கஞ்சா பரிமாற்றம் செய்வதில் விரோதமா என்கின்ற வகையில் போலீசார் தற்போது விசாரணையை துரிதப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:தேர்தல் 2024: தென்சென்னையில் வெற்றி வாகை சூடப் போவது யார்? - Lok Shaba Election 2024