திருநெல்வேலி : நெல்லை மாவட்டம், திருநெல்வேலி - தென்காசி சாலையில் ராணி அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்திலிருந்து ஏராளமான மாணவிகள் பயில்கின்றனர்.
இந்தக் கல்லூரியில் கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி இளங்கலை வணிகவியல் பாடப் பிரிவுக்கான வகுப்பறையில் ரத்தக் கறைகள் சிந்தி கிடந்ததைக் கண்டு மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அலுவலகத்திற்குச் சென்று ஆசிரியர்களிடம் தகவலை தெரிவித்தனர்.
அதன்படி, கல்லூரி நிர்வாகம் சார்பில், பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இத்தகவலறிந்து வந்த போலீசார், சம்பவ இடத்திலிருந்து தடயங்களைச் சேகரித்தனர். குறிப்பாக, வகுப்பறையில் சிந்திக் கிடந்த ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக மதுரைக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், நான்கு நாள் விசாரணைக்குப் பிறகு, வகுப்பறையில் ரத்தம் சிந்திக் கிடந்த விவகாரத்தில், கல்லூரியில் கட்டிட வேலை பார்த்து வரும் காரைக்குடியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற நபரை போலீசார் பிடித்து விசாரித்து வந்தனர். அந்த விசாரணையில், விக்னேஷ் ஒருதலைக்காதல் விவகாரத்தில் தன்னைத்தானே பிளேடால் கையை வகுப்பறையில் வைத்து அறுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
விக்னேஷ் சிக்கியது எப்படி? ரத்தக்கறை கிடப்பதாக தகவல் கிடைத்த உடனே, போலீசார் கல்லூரி முழுவதும் விசாரணையில் இறங்கினர். குறிப்பாக, அனைத்து வகுப்புகளுக்கும் சென்று மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
முதலில் கல்லூரி நிர்வாகம் சார்பில் மான் போன்ற விலங்குகள் ஏதாவது அடிபட்டு, அதன் மூலம் ரத்தம் சிந்தியிருக்கலாம் என கூறியிருந்தனர். இருந்தாலும் சந்தேகமடைந்த போலீசார், வேறு ஏதேனும் பின்னணி இருக்கிறதா என்பதை விசாரித்து வந்தனர்.
ரத்தக்கறை கண்டுபிடிக்கப்பட்ட முந்தைய நாள் ஞாயிறு விடுமுறை என்பதால், அன்று மாணவிகள் வகுப்பறையில் இருக்க வாய்ப்பில்லை. எனவே, வேறு நபர்கள் உள்ளே வந்தார்களா என்பதையும் ஆய்வு செய்தனர். அப்போது தான் கல்லூரியில் கட்டிட வேலை நடந்து வருவது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.