சென்னை:தமிழகத்தின் உள் மாவட்டம் மற்றும் சமவெளிப் பகுதிகளில் இயல்பை விட 2 டிகிரி - 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மிக அதிகமாக இருந்து வருகிறது. வட தமிழக உள் மாவட்டங்களிலும் வெப்ப அலை வீசி வருகிறது. இதேபோல், சென்னையிலும் நாளுக்கு நாள் கோடை வெயில் உச்சத்தை எட்டி வருகிறது.
இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பெரும் அவதிப்படுகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, அரசியல் கட்சிகள் சார்பாக ஆங்காங்கே தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. அதேபோல், சமூக ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், காவல்துறையினர் உள்ளிட்ட பலரும் பொதுமக்களுக்கு மோர் வழங்குவது, தண்ணீர் வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மாநில மனித உரிமைகள் ஆணைய புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் காஞ்சனா, சென்னையில் ஆர்.ஏ புரம், வில்லிவாக்கம் மார்க்கெட், வில்லிவாக்கம் பேருந்து நிலையம் என பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கும் வகையில் மண்பானை தண்ணீரை வைத்துள்ளார்.