கன்னியாகுமரி: மைலோடு அருகே மடத்துவிளை பகுதியைச் சேர்தவர் சேவியர்குமார் (42). இவர் நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும், கன்னியாகுமரி அரசுப் போக்குவரத்துப் பணிமனையில் மெக்கானிக்காகவும் பணியாற்றி வந்துள்ளார். மேலும், மயிலோடு புனித மிக்கோல் அதிதூதர் ஆலயத்திற்கு பங்குப் பேரவையின் பொருளாளராகவும் பணியாற்றி இருந்துள்ளார்.
மேலும், மயிலோடு ஆலயத்தில் பங்குத் தந்தையாகவும், பங்குப் பேரவையில் தலைவராகவும் ராபின்சன் என்பவர் இருந்து வருகிறார். தற்போது, பங்குப் பேரவையில் இருப்பவர்களுக்கும், ஏற்கனவே பங்குப் பேரவை நிர்வாகியாக இருந்த சேவியர் குமார் தரப்புக்கும் இடையே நிர்வாக ரீதியாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், தற்போதுள்ள பங்குப் பேரவை நிர்வாகத்திற்கு எதிராக சேவியர்குமார் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், மைலோடு பகுதியில் உள்ள புனித மிக்கோல் அதிதூதர் தேவாலயத்திற்குச் சொந்தமான மதர் தெரஸா பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் சேவியர்குமாரின் மனைவி ஜெமீலாவை பணியிடை நீக்கம் செய்து, சேவியர் குமாரை எச்சரித்துள்ளனர்.
இதனிடையே, நேற்று முன்தினம் (ஜன.19) ஜெமீலா தனது உறவினர்களுடன் பங்குத் தந்தை ராபின்சனைச் சந்தித்து, தனது ஆசிரியை பணியை மீண்டும் வழங்கும்படி கேட்டுள்ளார். தனது கணவர் சேவியர்குமார் இனி சமூக வலைத்தளங்களில் பதிவிட மாட்டார் என்று கூறியும் கூட, சேவியர்குமார் நேரில் வந்து எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டால்தான் வேலை தருவதாக மிரட்டியுள்ளார்.
அதன் பின்னர், நேற்று (ஜன.20) சேவியர்குமாரின் வீட்டிற்கு பாதிரியாருடன் வந்த வின்சென்ட் என்பவர், எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டால் வேலை கிடைக்க ஏற்பாடு செய்வதாகக் கூறியதை அடுத்து, சேவியர்குமார் மைலோடு தேவாலய வளாகத்தில் உள்ள பங்குத்தந்தை ராபின்சன் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது, பங்குத்தந்தை ராபின்சன் மற்றும் தற்போதைய பங்குப் பேரவை நிர்வாகிகளான தக்கலை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷ் பாபு, அவரது சகோதரர் சுரேஷ், ஜெஸ்டஸ் ரோக் ஆகியோர் அங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனை அடுத்து, பங்குத்தந்தை இல்லத்தில் சேவியர்குமார் இரத்தக் காயங்களுடன் பிணமாக கிடப்பது, அவரது மனைவி ஜெமீலாவுக்கு தெரிய வந்துள்ளது.