மயிலாடுதுறை:மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தின் 27வது குரு மகா சந்நிதானமாக உள்ளவர், ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள். இவர் தொடர்பான ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் உள்ளதாகக் கூறி, சிலர் ஆதீன நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகப் புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, ஆதீன கர்த்தரின் சகோதரர் விருத்தகிரி 7 பேர் மீது புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம், திருக்கடையூர் விஜயகுமார் ஆயியோரின் தூண்டுதலின் பேரில் செயல்பட்டதாக, தஞ்சை வடக்கு பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் ஆடுதுறை வினோத், சீர்காழி பாஜக முன்னாள் ஒன்றிய செயலாளர் விக்னேஷ், திருப்பனந்தாளையைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ், ஆதீனத்தின் மெய்க்காவலர் செந்தில், போட்டோ கிராபர் பிரபாகரன், செம்பனார்கோவில் தனியார் கல்வி நிறுவனத்தின் தாளாளர் குடியரசு, செய்யாறு வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் ஆகிய 9 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர்களில் வினோத், ஸ்ரீநிவாஸ், விக்னேஷ், குடியரசு ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், பாஜக மாவட்டச் செயலாளர் அகோரம் உள்ளிட்ட ஐந்து பேர் தலைமறைவாக உள்ளனர்.
இதனிடையே ஆதீனத்தின் மெய்க்காவலர் செந்தில், திருக்கடையூர் விஜயகுமார் ஆகிய இருவரும் ஆதீனத்திற்கு ஆதரவாக இருந்ததாகவும், அவர்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று ஆதீனத்தின் சார்பில் புகார் கொடுத்த அவரது தம்பி விருத்தகிரியே, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தனித்தனியே கடிதம் அனுப்பியிருந்தார்.