திருச்சி:நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி முதற்கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என்ற நான்குமுனை போட்டி நிலவி வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தாங்கள் தான் வெற்றி வாகை சூட வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இந்தியா கூட்டணிதான் வெற்றி பெற வேண்டும் என திமுக கூட்டணியில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து வருகின்ற நாட்களில் தமிழ்நாட்டில் பிரதமர் மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா இன்று (சனிக்கிழமை) இரவு தனி விமானம் மூலம் திருச்சி வரவுள்ளார். அதனைத் தொடர்ந்து, நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேனி உள்ளிட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் மேற்கொண்டு, பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார்.