தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெடிகுண்டு வீசி திமுக நிர்வாகி கொலை; குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைப்பு

Dmk executive murder: வண்டலூரில் திமுக ஒன்றிய செயலாளர் ஆராமுதன் கொலை வழக்கில் தலைமறைவாகவுள்ள மர்ம நபர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகக் காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

DMK executive aramudhan murder case
திமுக ஒன்றிய செயலாளர் ஆராமுதன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 12:22 PM IST

சென்னை:செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரைச் சேர்ந்த ஆராமுதன்(56), காட்டாங்குளத்தூர் திமுக வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார். இவர் ஏற்கனவே, வண்டலூரில் இரண்டு முறை ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றிரவு (பிப்.29) வண்டலூர்-வாலாஜபாத் மேம்பாலம் அருகே புதிதாகப் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையத்தைப் பார்வையிடுவதற்காக தனது காரில் ஆராமுதன் வந்துள்ளார்.

அப்போது, அப்பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென நாட்டு வெடிகுண்டுகளை காரின் மீது தூக்கி வீசியுள்ளனர். இதில், காரின் முன்பக்கம் கண்ணாடி முழுவதுமாக உடைந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த ஆராமுதன் காரில் இருந்து இறங்கி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

இதனையடுத்து, மர்ம நபர்கள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டியதில் அவரின் கை துண்டிக்கப்பட்டதோடு, மார்பு, தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்தார். இதையடுத்து, அந்த மர்ம கும்பலினர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஓட்டேரி காவல்துறையினர் உயிரிழந்த ஆராமுதனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே ஆராமுதன் ஆதரவாளர்கள், திமுக நிர்வாகிகள், ஊராட்சி தலைவர்கள் எனப் பலரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், அரசு மருத்துவமனையில் பிரேதத்தைப் பார்வையிட்டார். மேலும், இச்சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், குற்றவாளிகளை வலைவீசித் தேடிவருகின்றனர். அரசியல் பகையால் கொலை நடந்துள்ளதா? தொழில் போட்டியா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், ஆராமுதன் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மர்ம நபர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:குழந்தை கடத்தல்; வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை..காவல்துறை எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details