வேலூர்:வேலூர் மாவட்டம், காட்பாடி சேனூரைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன் (66). முன்னாள் ராணுவ வீரரான இவர், கடந்த மே 8ஆம் தேதி இரவு வீட்டை பூட்டி, சேனூர் மாரியம்மன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல், அவரது வீட்டின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்து, பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 20 பவுன் நகை மற்றும் பொருட்களை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
கோயிலுக்குச் சென்ற சவுந்தரராஜன் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததுள்ளார். பின்னர், உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி உள்ளனர். இதனையடுத்து, இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக சேனூர் பகுதி கோடாத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சங்கர் (19), திருமணி மெயின் ரோட்டைச் சேர்ந்த அவினேஷ் (19) மற்றும் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் என மூன்று பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், மூன்று பேரும் சேர்ந்து முன்னாள் ராணுவ வீரர் சவுந்தரராஜன் வீட்டில் 20 பவுன் நகை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும், காட்பாடி பகுதியில் உள்ள 4 வீடுகளில் 17 பவுன் நகைகளை திருடியதையும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 37 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:கோயம்பேடு அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி நடுரோட்டில் படுகொலை.. போலீசார் விசாரணை! - Koyambedu Murder