மதுரை:காதலிக்க வற்புறுத்தி இளம்பெண்ணை, இளைஞர் ஒருவர் அவர் பணி செய்யும் இடத்திற்கேச் சென்று சரமரியாக தாக்கியுள்ளார். பின்னர், அதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த விசாரணையில், மதுரை ஒத்தக்கடை அருகே சக்கரா நகர் பகுதியில் உள்ள தனியார் ஜெராக்ஸ் கடையில் பணி செய்து வருபவர் லாவண்யா (22). இவர், பள்ளியில் படிக்கும் சமயத்தில் சித்திக்ராஜா (25) என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில், சித்திக்ராஜா லாவண்யாவை தன்னை காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அதனால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 மாதங்களாக சித்திக்ராஜாவுடன், லாவண்யா பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். ஆனால், சித்திக்ராஜா லாவண்யாவிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொடர்ச்சியாக மன ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த நவ.17ஆம் தேதி லாவண்யா ஜெராக்ஸ் கடையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, சித்திக்ராஜா தனது நண்பருடன் வந்து காதலிக்க வற்புறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால், அதற்கு லாவண்யா மறுப்பு தெரிவித்ததால், கோபமடைந்த சித்திக் லாவண்யாவை கடுமையாக தாக்கியுள்ளார். அந்த தாக்குதலில், மயக்கமடைந்த லாவண்யாவை அக்கம் பக்கத்தில் இருந்தோர் மீட்டு மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். பின்னர், இந்த தாக்குதல் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.