தேனி: சதுரங்க வேட்டை பட பானியில், பணம் கொடுத்தால் அதை இரு மடங்காக திருப்பி தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.3 கோடியே 40 லட்சம் போலி 2,000 ரூபாய் நோட்டுகள், ரூ.14 லட்சம் பணம் மற்றும் 16 செல்போன், 3 கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ஆவடியைச் சேர்ந்த தவச்செல்வன் தன்னிடம், ரூ.10 லட்சம் பணம் கொடுத்தால் அதற்கு இரு மடங்காக பணம் தருவதாக கூறி தான் ஏமாற்றப்பட்டதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாதத்திடம் புகார் மனுவை அளித்துள்ளார்.
இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், தேனி துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில், ஆய்வாளர் உதயகுமார் உள்ளிட்ட போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட நிலையில், கருவேல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சேகர் பாபு மற்றும் பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த கேசவன் ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதில், இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, அவர்களது காரை பரிசோதனை செய்ததில், ரூ.3 கோடியே 40 லட்சம் போலி 2,000 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து, மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து தேனி துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சென்னை ஆவடியைச் சேர்ந்த தவச்செல்வன் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடத்தி, தற்போது இருவரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரிசர்வ் வங்கியால் திரும்பப் பெறப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்தால் அதற்கு தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும்.