தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் விற்பனை.. மூன்று பேர் கைது!

கரூரில் இளைஞர்களுக்கு சட்ட விரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்த பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசார் பறிமுதல் செய்த போதை மாத்திரைகள்
போலீசார் பறிமுதல் செய்த போதை மாத்திரைகள் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2024, 12:53 PM IST

கரூர்:கரூரில் சட்டவிரோதமாக போதை மாத்திரை விற்பனை செய்த விவகாரத்தில், போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவர்களிடமிருந்து 2 ஆயிரத்து 400 மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

கரூர் நகரப் பகுதியில் சட்டவிரோதமாக, குறைந்த விலையில் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கரூர் மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ரகசிய தகவலின் அடிப்படையில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில், 10 பேர் கொண்ட தனிப்படை குழு அமைக்கப்பட்டு, கரூர் மாநகரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்தச் சோதனையில், கரூர் ஆண்டங்கோயில் புதூரைச் சேர்ந்த எடில் ரெமிங்டன் (24), வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த மலர் என்ற மலர்கொடி (43), காந்திகிராமத்தைச் சேர்ந்த கிஷோர்குமார் ஆகிய மூன்று பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில், அவர்கள் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:ஓடும் ரயிலில் படுக்கை சரிந்து சிறுவன் காயமடைந்த விவகாரம்: மதுரை ரயில்வே கோட்டம் விளக்கம்!

மேலும், வலி நிவாரணி மாத்திரையை போதைக்கு அடிமையான இளைஞர்களுக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவர்களிடம் இருந்து 2 ஆயிரத்து 400 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், அந்த கும்பல் ஒரு மாத்திரையை 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பலை, கரூர் நகர காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்த போலீசார், எடில் ரெமிங்டன் மற்றும் மலர்கொடி ஆகிய இருவரையும் கைது செய்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, கிஷோர் குமார் உடல்நலக் குறைவு காரணமாக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details