கரூர்: கரூர் திருமாநிலையூரைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சோபனா. இவரது கணவர் முகேஷ் என்கிற ராமசுப்பிரமணி. இந்த நிலையில் சோபனாவிற்கு ரம்யா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு, அடிக்கடி ரம்யா சோபனாவின் வீட்டுக்கு வந்து சென்று வந்துள்ளார். இருவரும் சுற்றுலா செல்வதாக அடிக்கடி வெளியூர்களில் தங்கி, ஊர் சுற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரம்யா விபச்சாரத் தொழில் மேற்கொண்டு வந்ததாகவும், அவருக்கு தொழிற்பேட்டையை சேர்ந்த விஜய் என்பவருக்கும் தொடர்பு இருந்து வந்ததால், விஜய்யின் குடும்பத்தினருக்கும், சோபனாவிற்கும் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி பிரச்சினை ஏற்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சோபனாவிற்கும், அவரது கணவருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தனது கணவர் முகேஷ், ரம்யா மற்றும் அவரது நண்பர் விஜய் ஆகியோரை பழிவாங்கும் எண்ணத்துடன் வீட்டில் அரிவாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை வைத்திருப்பதாக, தான்தோன்றிமலை போலீசாருக்கு சோபனா அளித்த தகவலின் பேரில், காவல்துறையினர் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, கூலிப்படையினர் பயன்படுத்தும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது.
இதையும் படிங்க:'கொள்ளையிலும் பொண்டாட்டி பாலிசி'.. தாம்பரம் 50 சவரன் நகை திருட்டு சம்பவத்தில் தம்பதி கொடுத்த ஷாக்!
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த தான்தோன்றிமலை காவல்துறையினர், விசாரணையை தீவிரப்படுத்தினர். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் படி, கரூர் நகர உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வராஜ் மேற்பார்வையில் கரூர் நகரம் மற்றும் பசுபதிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து, தகவல்களை சேகரித்து அதன் அடிப்படையில், கூலிப்படையினரை ரகசியமாக தேடி வந்தனர்.
கைதானவர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu) இந்நிலையில் அக்டோபர் 9ஆம் தேதி ரகசியமாக ஓரிடத்தில் கூடிய கூலிப்படையைச் சேர்ந்த நாமக்கல் சின்ன முதலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் சக்கரவர்த்தி, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கோபால் (எ) பெரிய கோபால், திருப்பூர் அருகே உள்ள காங்கேயம் வீரமாத்தி தோட்டத்தைச் சேர்ந்த செந்தில் (எ) சின்னசாமி, ஈரோடு சென்னிமலை பகுதியைச் சேர்ந்த யுவராஜ், ஈரோடு வெள்ளாளப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி, கரூர் கோட்டையண்ணன் கோயில் தெருவை சேர்ந்த பாலு (எ) பாலகிருஷ்ணன் ஆகிய ஆறு பேரை சுற்றி வளைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள், 6 தோட்டாக்கள், அரிவாள், கத்தி கைப்பற்றப்பட்டு கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களை கைது செய்யும் போது தப்பியோடிய முகேஷ் திருமாநிலையூர் அமராவதி ஆற்று மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்ததால், எலும்பு முறிவு ஏற்பட்டு கரூர் காந்தி கிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரஸ்கான் அப்துல்லா பாராட்டுகளை தெரிவித்தார். கரூரில் கொலை திட்டத்துடன் சுற்றித்திரிந்த கூலிப்படையினரை துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பிடித்து காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்