கன்னியாகுமரி:நாகர்கோவில்,நேசமணி நகர்ப் பகுதியில் சேர்ந்தவர்கள் கலைக்குமார், புனிதவதி தம்பதியினர். இருவரும் மருத்துவர்களாக பணியாற்றிவருகின்றனர். இவர்களது வீட்டில் கடந்த 6ஆம் தேதி யாரும் இல்லாத நேரத்தில், மர்ம நபர்கள் வீட்டில் கதவை உடைத்து 90 பவுன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்துச் சென்று உள்ளார்.
இது குறித்து மருத்துவர் கலைக்குமார், நேசமணி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம் உத்தரவின் பெயரில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பின்னர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் காட்சிகளைக் கைப்பற்றி அதனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கொள்ளை சம்பவம் நடைபெற்ற பகுதியில் வாலிபர் ஒருவர் நடந்து செல்வது போன்ற காட்சிப் பதிவாகி இருந்தது.
அந்த காட்சிகளை வைத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கேரள மாநிலம் பாலராமபுரத்தை சேர்ந்த ஆதித்கோபன் என்ற முத்துகிருஷ்ணன்(வயது 30) என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர், போலீசார் தேடுவதை அறிந்த ஆதித் கோபன் தனது இருப்பிடத்தை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருந்துள்ளார்.
பின்னர் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆதித்கோபன் பஞ்சாப்பில் உள்ளதாகத் தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பஞ்சாப் விரைந்த போலீசார் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கையும் களவுமாகப் பிடித்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட ஆதித் கோபனை நாகர்கோவிலுக்குக் கொண்டு வந்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளார். அதில் தான் தகவல் தொழில்நுட்பம் படித்து உள்ளதாகவும் பஞ்சாபைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.