தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் யானை தந்தம் விற்க முயற்சி; சுற்றி வளைத்து பிடித்த வனத்துறை! - IVORY SMUGGLING IN KARUR

குளித்தலையில் யானை தந்தத்தை விற்பனை செய்ய முயற்சி செய்த 5 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடத்தி விற்க முயன்ற யானை தந்தம்
கடத்தி விற்க முயன்ற யானை தந்தம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2025, 7:08 PM IST

கரூர்:குளித்தலை அருகே ரூ.5 லட்சம் மதிப்புள்ள யானை தந்தத்தை பதுக்கி விற்பனை செய்ய முயற்சி செய்த, 17 வயது சிறுவன் உள்ளிட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வனத்துறை விசாரணையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், வி.என்.எஸ் நகரைச் சேர்ந்தவர் பெருமாள் (42). இவர் தனக்கு கிடைத்த யானை தந்தத்தை விற்க முயற்சி செய்து, அதற்காக இடைத்தரகர்களைத் தொடர்பு கொண்டுள்ளார்.

ஆனால், இது குறித்து சென்னை வனத்துறை பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ரகசிய தகவலின் படி சென்னை வனத்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக, மதுரை, திருச்சி மற்றும் கரூர் வனசரகர்கள் மூலமாக தந்தத்தை வாங்குவதற்கு ஏற்பாடு செய்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதில், மதுரை, திருச்சி வனச்சரகர்கள், புரோக்கர் உதவியுடன் யானை தந்தத்தை வாங்குவதற்கும், யானை தந்தத்தை விற்பனை செய்யும் கும்பலை பிடிப்பதற்காக கரூரை அடுத்த குளித்தலை பகுதிக்கு வரவழைத்துள்ளனர். அதன்படி, பெருமாள் தன்னிடமிருந்த யானை தந்தத்தை விற்பனை செய்வதற்காக 4 பேருடன் நேற்று மாலை (ஜனவரி 03) வெள்ளிக்கிழமை குளித்தலை பகுதிக்கு வந்துள்ளார்.

இவர்களை கரூர் மாவட்ட வனஅலுவலர் சண்முகம் அறிவுரையின் பேரில், வனசரக அலுவலர் தண்டபாணி தலைமையில், மதுரை மற்றும் திருச்சி வனசரகர் நவீன் மற்றும் வனக்காப்பாளர்கள் சிவரஞ்சனி, ஈஸ்வரி, வானவர், பெரியசாமி கொண்ட குழுவினர் பின் தொடர்ந்துள்ளனர்.

அதன்படி, நேற்று மாலை 6.00 மணியளவில், குளித்தலை மணப்பாறை நெடுஞ்சாலை கோட்டைமேடு அருகே கடத்தி வந்த யானை தந்தத்தை விற்பதற்காக காத்திருந்த 5 பேரை, வனத்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்துள்ளனர்.

இதையும் படிங்க:நீலகிரியில் சிறுத்தை தாக்கி இளைஞர் உயிரிழப்பு..மக்கள் அச்சம்!

தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பெருமாள் தான் வைத்திருந்த யானை தங்கத்தை விற்பனை செய்வதற்கு, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு குமாரபாளையம் நாராயணன் நகரைச் சேர்ந்த நாகராஜ் (56), திருச்சி மாவட்டம், தொட்டியம் கோசவம்பட்டியைச் சேர்ந்த ராஜா (65), கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் முனையனூர் மேல தெருவைச் சேர்ந்த நடராஜன் (56), திருச்சியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோருடன் வருகை புரிந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, இவர்களிடமிருந்து ஐந்து செல்போன்கள் மற்றும் சுமார் ரூ. 5 லட்சம் மதிப்புடைய யானை தந்தத்தை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து, கைது செய்த 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

பின்னர், நீதிபதி நான்கு நபர்களை கரூர் கிளை சிறையில் அடைக்க உத்தரவிட்டதின் பேரில், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, 17 வயது சிறுவனை கரூர் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details