தேனி: பெரியகுளம் அருகே உள்ள எ.புதுப்பட்டி புறவழிச்சாலையில், பெரியகுளம் வடகரை காவல் ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான போலீசார் வழக்கம்போல் நள்ளிரவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த கேரளா மாநிலப் பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், காரில் இருந்தவர்களிடம் 250 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் கார் முழுவதையும் சோதனை செய்துள்ளனர். அப்போது, காரில் சர்வதேச சந்தையில் கிடைக்கும் 'மெத்தாம்பெட்டமைன்' என்ற போதைப்பொருள் 30 பாக்கெட்டுகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், மூவரையும் கைது செய்ததோடு, காரையும் பறிமுதல் செய்து பெரியகுளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும், சர்வதேச சந்தையில் மட்டும் கிடைக்கும் போதைப்பொருளான மெத்தாம்பெட்டமைன் கைப்பற்றப்பட்ட தகவலறிந்த தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத், பெரியகுளம் காவல் நிலையத்திற்கு நேரடியாக வந்து விசாரணை மேற்கொண்டார்.