சென்னை: இன்ஸ்டாகிராமில் ஒரு குறிப்பிட்ட ஐடியில் இரு வாலிபர்கள் கத்தியை வைத்து சினிமா பட டயலாக்குடன் ரீல்ஸ் வெளியிட்டனர். அந்த வீடியோவுக்கு 1 லட்சத்துக்கும் மேலான லைக்ஸுகள் குவிந்து சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக கொளத்தூர் போலீசார் வீடியோ வெளியிட்ட நபரின் ஐ.பி. எண்ணை வைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த நபர் வந்தபோது போலீசார் மடக்கி பிடித்து அவரது செல்போனை பறிமுதல் செய்து அந்த இளைஞரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்துரு (19) என்பது தெரிய வந்தது. அவர் செல்போனை ஆய்வு செய்ததில் இன்ஸ்டாகிராமில் அவரது நண்பர் ரஞ்சித் என்பவர் உடன் சேர்ந்து கத்தியை வைத்து சினிமா பாடலுக்கு ரீல் செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் ரஞ்சித் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே ரீல்சும் வேண்டாம், வன்முறையும் வேண்டாம், நல்லொழுக்கமே நன்மை பயக்கும் என சென்னை காவல்துறை தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங்கின் 16ஆம் நாள் நினைவேந்தல்: உருவப்படம் திறந்து மனைவி அஞ்சலி!